தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை... இடியாப்பச் சிக்கலில் காவலன்!
சென்சார் சான்று வாங்கி, படம் தியேட்டரைத் தொடும் நேரத்தில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது விஜய்யின் காவலன்.
தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை விஜய் தந்தால்தான் காவலனை ரிலீஸாக விடுவோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.
இந்த சங்கத்தின் அவசரக் கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தின் முடிவில் பேசிய, சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், "விஜய்யின் ஆறு படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளன. ஆனால் நாங்கள் கேட்பது அவர் தனது சுறா பட நஷ்டத்தை மட்டுமாவது தரவேண்டும் என்பதுதான். அப்படித் தராவிட்டால் காவலனை ரிலீஸ் பண்ணவே விடமாட்டோம்," என்றார்.
இன்னொரு பக்கம், படத்துக்கு நிதி வழங்கிய பைனான்ஸியர்கள் உடனடியாக பணத்தை செட்டில் செய்தாக வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.
வட தமிழகம், சென்னை போன்ற பகுதிகளில் இந்தப்படத்துக்கு ஒரளவு திரையரங்குகள் கிடைத்தாலும், தென் மாவட்டங்களில் இதுவரை 10 திரையரங்குகள் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மிகப் பலம் வாய்ந்த சக்திகள் அத்தனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காவலன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிகள் காரணமாக, தனது வேக வேகமான அரசியல் நகர்வுகளை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார் விஜய். அதிமுக, ஜெயலலிதா, அரசியல் கட்சி துவக்கம் போன்றவை குறித்து அவர் இப்போது வாய் திறப்பதே இல்லை. இதுகுறித்து அதிகம் பேசி வந்த அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரனும் அமைதியாகிவிட்டார்.
வெளிநாடுகளிலும் காவலனுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். புதிய படங்களை பெரும் விலைக்கு வாங்க வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த பொங்கலுக்கு காவலன் வெளியாக வேண்டுமானால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பேசித் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காவலன் நிலை கேள்விக்குறியதாகிவிடும்.
நடிகை மீனா குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு மனைவி லதாவுடன் வந்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. குழந்தைக்கு தங்கச் சங்கிலி பரிசளித்தார்.
ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் அவருக்கு ஜோடியாக கலக்கியவர் மீனா. எஜமான், வீரா, முத்து என பிளாக்பஸ்டர் படங்களின் நாயகி மீனாதான்.
கடந்த ஆண்டு, பெங்களூர் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் வித்யாசாகரை மணந்தார். கருவுற்றார். புத்தாண்டில் 1.1.11 என பிறந்த தேதி அமையுமாறு முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீனாவின் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் தம்பதி சமேதராகக் கலந்து கொண்டார் சூப்பர் ஸ்டார்.
தங்கச் சங்கிலி ஒன்றையும் பரிசளித்து வாழ்த்தினார்.
திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாக வந்திருந்தனர் இந்த நிகழ்ச்சிக்கு.
வசூலில் சற்று முன்னே பின்னே இருந்தாலும், பாராட்டுக்கள் வஞ்சனையின்றி குவிந்து வருகின்றன தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு.
சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் சரண்யா, விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தரத்தைப் பார்த்து திரையுலகமும் படைப்புலகமும் கொண்டாடி வருகிறது.
படம் பார்த்த இந்தி நடிகர் விவேக் ஓபராய்க்கு மிகவும் பிடித்துப் போனதால், தென்மேற்குப் பருவக்காற்ரை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறுகையில், "இது சாமானிய மக்களின் படம். அவர்கள் வாழ்க்கையை அப்பட்டமாக பிரதிபலித்துள்ளதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பார்த்து மகிழ்கிறார்கள். இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக்காகிறது. விவேக் ஓபராய் தொடர்பு கொண்டு நாயகனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சரண்யாவே இந்தியிலும் அம்மாவாக நடிக்கிறார். கதாநாயகிக்கு ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
கேமராமேன், இசையமைப்பாளர் என இதே டீம் தொடர்கிறது. மைக்கேல் ராயப்பன் படத்தைத் தயாரிக்கிறார்..." என்றார்.
மைக்கேல் ராயப்பன்தான் இந்தப் படத்தை தமிழில் வெளியிட்டார். பூலான்தேவி வாழ்ந்த சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.
தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.
அழகிரி கோரிக்கைகள்:
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
- சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.
- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்
மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்றுஇரவு முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோயினாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அவருக்குப் பதில் ஹன்ஸிகா மோத்வானி நடிப்பார் என்று அறிவித்துள்ளனர்.
இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப் படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கியவர் இவர்.
நண்பேன்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவைப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன் நடிப்பார் என்றார்கள். பின்னர் த்ரிஷா நடிப்பார் என்று அறிவித்தனர்.
இப்போது த்ரிஷாவுக்கு பதில் ஹன்ஸிகா மோத்வானி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "இந்தக் கதை மிக அருமையாக இருந்தது. அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின் எனக்குப் பிடித்த தயாரிப்பாளர். பெரிய பேனர், புதுமுகம் என்றாலும் பெரிய ஹீரோ... சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் நிச்சயம் என் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையைத் தரும் என நம்புகிறேன்," என்றார்.