Saturday, February 5, 2011

ஜெ- எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சந்திப்பு... அதிமுகவுக்கு விஜய் பிரச்சாரம்?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


அரசியலில் குதிப்பது குறித்தும நடிகர் விஜய்யும் அவர் தந்தையும் மாறி மாறி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் கூறினாலும், 'அரசியல் ரீதியான நெருக்கடிகள் தனக்கு தொடர்வதால் வேறு வழியில்லை, நான் அரசியலில் இறங்கியாக வேண்டியுள்ளது' என்று விஜய் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனோ, அதிமுகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் திட்டமுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் 'காவலன்' திரையிடப்பட்டது.

பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.

தனக்கு இந்த நெருக்கடிகளைக் கொடுத்து வருவது ஆளும் திமுகவினரே என்று இப்போது பகிரங்கமாக பேசி வருகிறார் விஜய். இதனால், இந்தத் தேர்தலில் அவரும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்?

கல்யாணம் பண்ணி செட்டிலாகும் முன் எப்படியாவது ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் கனவு பலித்துவிடும் போலுள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.


பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், ராணாவில் நடிப்பதற்காக, அக்ஷய் குமாரின் ஒரு படத்தைக் கூட உதறிவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றார்கள். ஆனால் அவரோ கமல் - செல்வராகவன் இணையும் படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது ரஜினியின் அந்த 'இன்னொரு ஜோடியாக' த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது தமிழில் மங்காத்தா படத்தில் மட்டும் நடித்துவரும் த்ரிஷா, சற்று இடைவெளிக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ள புதிய படம் இது.

இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கக் கூடும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. இதனால், 'த்ரிஷா நடிக்கக் கூடாது' என எஸ்எம்எஸ்ஸெல்லாம் அனுப்பி வந்தனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் தேடும் கவுதம் மேனன்!

நடுநிசி நாய்கள் படத்துக்குப் பிறகு, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் ஷூட்டிங் நடந்து பின் நிறுத்தப்பட்டது.

இப்படத்திற்கு முதல் அசின் - சூர்யா ஜோடியாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் பின்னர் விலகிக் கொள்ள, திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் வேறு படங்களில் கவுதம் மேனன் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையே. த்ரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் மறுத்துவிட்டார். மீண்டும் திரிஷாவையே நடிக்கக் கேட்டாராம். இந்த முறை த்ரிஷாவும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கவே, வெறுத்துப் போன கவுதம் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்.

புதிய நாயகி கிடைக்கும் வரை சும்மா இருப்பானேன் என்று, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை புதுமுகங்களை வைத்து தொடர முடிவு செய்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

Wednesday, February 2, 2011

ரஜினிக்காக அக்ஷய் குமார் படத்துக்கு நோ சொன்ன தீபிகா!

ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக, தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து, இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும், உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.

பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.



இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் இல்லை. ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.

கடைசியில் அக்ஷய் குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!

இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

எந்திரன் இரண்டாம் பாகம்... ஷங்கர் சூசகம்!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ 2 எனும் பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எந்திரனை உருவாக்கிய அதே டீம் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கையில், "ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்" என்று பதிலளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ரஜினி - ஷங்கர் எப்போது சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் 'ரோபோ 2' வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்!

ஷங்கர் - விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!

விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி,அதிர்ச்சியில் திமுக!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்தது.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசா மீது சட்டவிரோத கிரிமினல் செயல்பாடு, தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளை மீறி சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

ஐபிசி 120B, 13(2), 13(1D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, நீரா ராடியா, தொலை தொடர்பு துறை முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தப் புகாரையடுத்து நவம்பர் 14ம் தேதி ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராசாவிடம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதன் முதலில் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது அவரது உறவினர்களிடமும் நண்பரிடமும் விசாரணை நடந்தது. அதற்கு முன் 8ம் தேதி அவரது வீட்டிலும் அவரது உறவினர்களின் வீட்டிலும் என மொத்தம் 14 இடங்களில் ரெய்ட் நடத்தியது.

25ம் தேதி 2வது முறையாக ராசாவிடம் விசாரணை நடத்தினர். இந் நிலையில் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

சகோதரரிடமும் விசாரணை:

அதே நேரத்தில் ராசாவின் சகோதரர் கலிய பெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் இன்று காலை முதல் ராசாவிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக விசாரணை நடத்தினர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

இன்றைய விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக உள்ளதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

அதே போல இன்று பிற்பகலில் ராசாவை கைது செய்தது சிபிஐ.

அவர்களுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ராசாவின் மருத்துவர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு விரைந்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. ராசா இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது இன்று சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளை சிறையில் அடைக்கப்படுவாரா என்பதும் தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வரும் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தனது தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ரூ. 22,000 கோடியளவுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறியுள்ளது.

அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுகவை நெருக்கவே இந்த நேரத்தில் சிபிஐ தனது பிடியை இறுக்குவதாகவும் பேச்சுக்கதள் எழுந்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கையால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அதிமுக கொண்டாட்டம்:

இந் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதை அதிமுகவினர் .பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர்.

திமுக எம்எல்ஏ சாலைமறியல்:

  Read:  In English 
ராசா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆண்டிமடம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்ஏவுமான துரைசாமி மற்றும் திமுகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Monday, January 31, 2011

3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்?

3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.

இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.

ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என 'முக்கியமான இடத்திலிருந்து' தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!

ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.

அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.

விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.

அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!

அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்... மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் 'ஏழாம் அறிவு', கேவி ஆனந்தின் 'மாற்றான்' படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!

ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.

ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். 'மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது' என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.

சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்!

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

காதலர் தினத்திற்கு 2 படம்

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது.

தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு சிவா மனசுக்குள் சக்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று ஆனந்த்தின் கோ. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள எங்கேயும் காதல்.

இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த இரு படங்களில் யார் காதலர்களுடைய பெருவாரியான ஆதரவுகளைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Google Custom Search